100 நாள் வேலை திட்டம் இல்லாததால் விவசாயத்திற்கு குவிந்த வேலையாட்கள்.
படவிளக்கம்:- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் பெருமளவில் நடவு பணியில் ஈடுபட்ட பெண்கள்.
விவசாயிகள் பெருமளவில் விவசாய வேலையை விட்டுவிட்டு சென்னை பெங்களூர் ஓசூர் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில், ஹோட்டல்கள், கட்டிடத் தொழில்கள், தள்ளுவண்டி கடைகள்,ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள், மூட்டை தூக்கும் வேலை, மளிகை கடைகள், காய்கறி கடைகள், டிரைவர்கள்
பொன்ற பல மாற்று வேலைகளுக்கு சென்று விட்டனர். கிராமத்தில் மீதம் இருந்த மக்கள் அனைவரும் 100 நாள் வேலை திட்டம் தொடங்கிய நாட்களிலிருந்து விவசாய கூலி வேலைக்கு யாரும் முன்வருவதில்லை, அப்படி வந்தாலும் கூலியை அதிகமாக கேட்கின்றனர் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.
கொரொனா நோய்த்தொற்றின் காரணமாக 144 தடை விதித்து ஊரடங்கு அமல்படுத்தியது தமிழக அரசு, இதன் மூலம் வெளியூர்களில் இருந்த அனைவரும் தங்கள் கிராமத்திற்கு வந்துவிட்டனர்.எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் ஏழுமலை எனும்
விவசாயி கூறியதாவது :-
சாதாரண நாளில் ஆட்களை கூப்பிட்டால் யாரும் வர மாட்டார்கள் அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அதிகமான கூலியை கேட்பார்கள். 100 நாள் வேலை நடைபெறும் சமயத்தில் ஆட்கள் யாரும் வரமாட்டார்கள் அத்தருணத்தில் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து ஆட்களைத் தேடி தவிப்பேன். 100 நாள் வேலைத்திட்டம் செய்யும் நேரத்தில் நாங்கள் எந்த பயிரும் செய்வதில்லை. ஆனால் இப்பொழுது எந்த வேலையும் இல்லாததால் 50 பேர் தேவையான நடவு வேலைக்கு 200 பேருக்கும் மேல் ஆட்கள் வந்திருக்கின்றார்கள் இதேபோல் எப்பொழுதும் வேலைக்கு ஆட்கள் வந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.எங்கள் தலைமுறைக்கு பிறகு விவசாயம் செய்வதற்கு ஆட்களே கிடையாது எனவே இளம் தலைமுறையினர் மீண்டும் விவசாயத்தை கையிலெடுத்து செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என கூறினார்.
கலசப்பாக்கம் செய்தியாளர் கிருபாகரன்