கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீஅபிநவ், இகாப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.வெ.அன்புச்செல்வன், இஆப., அவர்கள் தலைமையில் நேற்று (24.04.2020) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இஆப., அவர்கள்
தெரிவித்ததாவது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வருவாய்த்துறை சார்ந்த துணை ஆட்சியர்கள்,
வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி
செயல் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் ஆகியோர்களுக்கு இனி வரும்
காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வருவாய்த்துறை சார்ந்த வட்டாட்சியர்கள் தங்கள் பகுதிகளில்
பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை காலை, மாலை இரு நேரங்களிலும் தொடர்ந்து
கண்காணிப்பதோடு, கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் குறித்து தினந்தோறும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்களை
அனைருக்கும் சென்றடைய ஏதுவாக கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்களை
தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்
தூய்மை பணிகளை துரிதப்படுத்தி வரும் சனி மற்றும் ஞாயிறு இருதினங்களில் லைசால் கிருமி
நாசினிகள் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளின் சுற்றுச்சுவர், தெருக்களில் தெளிக்க
வேண்டும். மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் இரு
நோரங்களும் கிருமி நாசினிகள் தெளித்து தூய்மை பணி மேற்கொள்ள
அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளிச்சிங் பவுடர் தெளித்து தூய்மை பணியை துரிதமாக செயல்படுத்த
வேண்டும். தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான கையுறை, முக
கவசம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தேவை அறிந்து உடனுக்குடன் வழங்க வேண்டும்.
நகராட்சி மற்றும் பேரூராட்கிளில் தூய்மை பணிகளை வார்டு வாரியாக துரிதமாக
மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்
தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
நகராட்சி பகுதிகளில் மூன்று வண்ணங்களில் வழங்கிய அனுமதி சீட்டுகள் அனைவருக்கும்
கிடைக்கப்பெற்றதா என்பதை அறிந்து, கிடைக்காதவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.மேலும் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க ஆட்டோவில் விழிப்புணர்வு
பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட வழங்கல் துறை மூலம் அனைத்து நியாயவிலைகடைகளிலும் தமிழக அரசின்
மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களின்
வீடுகளுக்கும் டோக்கன் நேரடியாக வழங்கவும், ஒரு நாளைக்கு 150 நபர்களுக்கு மட்டுமே
வழங்க வேண்டும் என்றும் காலை 8.30 மணிமுதல் மாலை 3.30 மணிக்குள் தொகுப்பினை
பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். நகர் மற்றும் கிராமப்புறங்களில் குடும்ப அட்டை
இல்லாதவர்களுக்கு உடனடியாக புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகையினை
பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம பூசாரிகள்
மற்றும் நாட்டுபுற கிரமிய கலைஞர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.1000/- அனைவருக்கும்
சென்றடைய வட்டாட்சியர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் விவசாயம் தொடர்பான பணிகள் தங்கு தடையின்றி நடைபெற வேளாண்துறை
உரம், விதை மற்றும் விவசாய பணிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் வழங்க
வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர்
திரு.ராஜகோபால் சுங்கரா,இஆப., விருத்தாச்சலம் சார் ஆட்சியர் திரு.பிரவின்குமார், இஆப.,
சிதம்பரம் சார் ஆட்சியர் திரு.விசுமகாஜன், இஆப., கடலூர் வருவாய் கோட்டாட்சியர்
திரு.ஜெகதீஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.