அதிமுக அரசின் சொல்லிலும் சரி, செயலிலும் சரி; குளறுபடிகள், உளறுபடிகள், முரண்பாடுகள், பிறழ்பாடுகள்! உள்நோக்கம் மற்றும் விளம்பர மோகத்தால் அரசு எடுக்கும் தகாத நடவடிக்கைகளால், கொரோனா பாதித்தவர்களைவிட, பாதிக்காதவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்! தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

அதிமுக அரசின் சொல்லிலும் சரி, செயலிலும் சரி; குளறுபடிகள், உளறுபடிகள், முரண்பாடுகள், பிறழ்பாடுகள்! உள்நோக்கம் மற்றும் விளம்பர மோகத்தால் அரசு எடுக்கும் தகாத நடவடிக்கைகளால், கொரோனா பாதித்தவர்களைவிட, பாதிக்காதவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்! தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!




இன்ன இடத்தில், இன்ன சமயத்தில் அரசியல் பேசக் கூடாது; அதுவும் இந்தக் கொரோனா சமயத்தில் அரசியல் பேச்சுக்கே இடமில்லை என்றெல்லாம் பேசக் கேட்கிறோம். இது வலதுசாரிகள், பிற்போக்குவாதிகள், சனாதனிகள், சங்கிகள் ஆகியோரிடமிருந்தே வரும் வார்த்தைகள். அரசியல் பேச்சு கூடாது என்று சொல்லும் இவர்கள்தான், “சீனாக்காரன் அவன் புத்திய காட்டிட்டான் பாத்தியா.... அவனுவ அனுப்புன ரேபிட் டெஸ்ட் கிட்டெல்லாம் போலி... ஒண்ணு கூட வேல செய்யல” என்றும் சொல்கிறார்கள். நாம் கேட்பது, எது அரசியல், எது அரசியல் இல்லை? இதை மேற்படியார்கள் தெரிவிக்கட்டுமே! அவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது: “அரசியல் இல்லாத சொல், செயல் என்று எதுவும் கிடையாது; எதிலும் சாதக பாதகங்கள் உண்டா அல்லது கிடையாதா என்பதைக் குறிப்பதே அரசியல்!” கொரோனா பரிசோதனைக்கு துரித சோதனைக் கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்) அவசியம் என்ற பேச்சு எழுந்தது. அதன்படி, 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது; ஏப்ரல் 9 அல்லது 10 தேதிகளில் வந்துவிடும் என்று சொல்லப்பட்டது. இந்தக் கிட் ஆர்டர் கொடுக்கப்பட்ட விடயம் தமிழ்நாட்டில்தான் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டது. அதுவரை தமிழ்நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து நாள்தோறும் அறிவித்துவந்த தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் திருமதி பியூலா ராஜேஷ் அவர்கள், அதற்குப் பின் தொலைக்காட்சிகளில் தோன்றவே இல்லை. அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இப்போது ‘கொரோனா நிலவரம் குறித்த சுகாதாரத் துறையின் தகவல்’ என்பதாக மாறிப் போயிற்று. ஆர்டர் கொடுக்கப்பட்டதில், சீனாவின் குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனம் 3 லட்சம் கிட்களையும், லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனம் 2.5 லட்சம் கிட்களையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தன. ஆனால் இந்தக் கிட்கள் வேலை செய்யவில்லை என்று பேசப்பட்டது; அது உண்மையா என்று தெரியவில்லை. இந்நிலையில் தாங்கள் வினியோகம் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் தரம் தொடர்பாக இந்திய விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தயார் என சீன நிறுவனங்கள் அறிவித்தன. 3 லட்சம் கிட்களை அனுப்பிய குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தக் கிட்களை நாங்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். எங்கள் தயாரிப்பை புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மதிப்பிட்டு ஏற்றுக்கொண்டது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில், எங்கள் நிறுவனம் ஒவ்வொரு நாட்டின் சுகாதார அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கிறது. இந்தியாவுடனும் ஒத்துழைக்கத் தயார்” என்று கூறியுள்ளது. 2.5 லட்சம் கிட்களை அனுப்பிய லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “எங்கள் ரேபிட் டெஸ்ட் கிட்களின் முடிவுகள் துல்லியமாக இல்லை என்று இந்தியாவில் இருந்து வந்துள்ள புகார்களைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்கத் தயார். எங்கள் கருவிகளைப் பொறுத்தமட்டில் அவற்றை 2 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியசுக்குள் வெப்ப நிலை உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அவை உறையக்கூடாது. கருவிகளை வைக்கிற அறையின் வெப்ப நிலை மிக அதிகளவில் இருந்தால், அது பரிசோதனையின் துல்லியத்தில் பாதிப்பை உண்டாக்கலாம்” என்று கூறியுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட்களுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டது என புகார் கூறப்பட்டது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “சத்தீஸ்கர் மாநிலம் தென்கொரியாவிடமிருந்து ரூ.337 + ஜிஎஸ்டிக்கு கிட்களை வாங்கியிருக்கையில் தமிழ்நாடு அரசு ரூ.600 கொடுத்துள்ளது” என்று நேரடியாகவே புகர் கூறினார். ஆனால் அதற்கு நேரடியாகப் பதில் வரவில்லை. “நாங்கள் இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் - ஐசிஎம்ஆர் (Indian Council of Medical Research - ICMR) நிர்ணயித்த விலையில்தான் வாங்கியிருக்கிறோம்” என்று சுற்றிவளைத்துப் பூடகமாகத்தான் பேட்டியளித்தனர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத்தும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கூட்டாக! “ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிக்கும் சீன நிறுவனம் ஒரு கிட்டை 225 ரூபாய்க்கு விற்கிறது. அதன் இறக்குமதிக்கு ஆகும் கட்டணம் 20 ரூபாய். ஆக மொத்தம் ஒரு கிட் 245 ரூபாய்” என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அதிமுக அரசு 600 ரூபாய் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, நேரடியாக ஐசிஎம்ஆர் அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடமிருந்து வாங்காமல், ஐசிஎம்ஆர் அங்கீகாரம் செய்யாத சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருப்பதும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தரமில்லாத கிட்களைப் பயன்படுத்த வேண்டாம், திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று ஐசிஎம்ஆர் மாநிலங்களுக்குச் சொல்லியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடந்துகொண்டிருக்கும்போதே 4 நாட்கள், 3 நாட்கள், 2 நாட்கள், 1 நாள் என்று மாநகராட்சிகளில் “முழு” ஊரடங்கை அதிமுக அரசு அறிவித்துள்ளது. அதற்கு என்ன அவசியம் வந்தது இப்போது? இதனால்தான் சொல்கிறோம்: கொரோனா விடயத்தில் அதிமுக அரசின் சொல்லிலும் சரி, செயலிலும் சரி; குளறுபடிகள், உளறுபடிகள், முரண்பாடுகள், பிறழ்பாடுகள்! உள்நோக்கம் மற்றும் விளம்பர மோகத்தால் அரசு எடுக்கும் தகாத நடவடிக்கைகளால், கொரோனா பாதித்தவர்களைவிட, பாதிக்காதவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்! இதனை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image