தன்னார்வலர்கள் உணவோ பொருளோ அரசிடம் தான் தர வேண்டும், இல்லையேல் வழக்கு போடுவோம் என மிரட்டுவதா? இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம்.
கொரோனா வைரஸ் தொற்றை முன்னிட்டு அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்களும் வெளிமாநிலத் தொழிலாளர்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். மத்திய, மாநில அரசுகள் இந்த மக்களுக்கு போதுமான உதவிகளை செய்யாத நிலையில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் அவர்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கி உதவினர். இந்நிலையில் தன்னார்வ அமைப்புகள் உணவோ பொருளோ பணமோ தனிப்பட்ட முறையில் வழங்கக்கூடாது என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மீறினால் 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
அரசியல் பிரமுகர்களோ அல்லது தான்னார்வலர்களோ தனிப்பட்ட முறையில் எந்த உணப்பொருள், பணம் மற்றும் உணவுகளை கொடுக்க விரும்பினால் அதை அரசிடமே வழங்கவேண்டும் என விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை மேலும் மேலும் மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கும் என்பதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
எந்தவித முன்னேற்பாடுகளும் செய்திடாமல் அவசரஅவசரமாக அரசு பிறப்பித்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் வாழக்கூடிய தினக்கூலி மக்களும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களும் ஏராளமான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
பணியில் உள்ள சுகாதாரத் துறை காவல்துறை தூய்மைப் பணியில் உள்ள பணியாளர்கள் என அனைவருக்கும் முக கவசம் உள்ளிட்ட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக்கூட அரசாங்கம் போதுமான அளவு ஏற்பாடு செய்யவில்லை.
கொரோனா பரிசோதனை செய்வதற்கான உபகரணங்கள் போதுமான அளவு இதுவரை வாங்காத சூழலும் உள்ளது. பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அரசு இதுவரை அதில் போதுமான கவனம் செலுத்தாத போக்கே உள்ளது.
ஊரடங்கு அறிவித்த முதல் நாளில் இருந்தே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அரசியல் வேறுபாடுகளை கடந்து தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், உணவு கிடைக்காத மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதை அரசாங்கம் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால் அரசு கண்டுகொள்ளாத சூழ்நிலையில் பொது மக்களும் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற உதவியை உணர்வுபூர்வமாக மக்களுக்கு செய்து வருகின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக உதவி செய்யும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தன்னார்வலர்களை தடுப்பதும் வழக்குப் போடுவேன் என மிரட்டுவதும் சாமானிய மக்கள் மீதான அரசினுடைய அலட்சியப்போக்கையே வெளிப்படுத்துகிறது.
தமிழகத்திற்கு என மத்திய அரசாங்கம் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கீட்டு தொகை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, கொரோனா பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை இதுவரை மத்திய அரசாங்கம் ஒதுக்கவில்லை. அதை ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக மாற்றி நிர்பந்தம் செய்து மத்திய அரசாங்கத்திடம் கேட்டு பெறுவதற்கு மாறாக, இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு இருப்பது மேலும் நிலைமையை சிக்கலாக்கும் என்பதை கூற விரும்புகிறோம்.
எனவே அரசியல் கட்சிகள் தன்னார்வலர்கள் உதவி செய்யும் பணியைச் செய்திட உரிய அனுமதி வழங்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் அரசியல் வேறுபாடுகளை கடந்து தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து கொரோனா நிவாரணப் பணிகளை செய்திட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.