திருப்பூர்: வறுமையின் காரணமாக கருமத்தம்பட்டியிலிருந்து திருப்பூர் வரை கைக்குழந்தையுடன் கணவன் - மனைவி நடந்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஒட்டுமொத்த பணிகளையும் ஸ்தம்பிக்க செய்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மக்கள் பயணம் செய்து வந்த பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை மே மூன்றாம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனால் வெளியூரில் வேலை பார்த்து வருபவர்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவை கருமத்தம்பட்டி அடுத்த முத்துகவுண்டன்புதூர் பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வந்தனர்.கோவையிலிருந்து திருப்பூருக்கு கைக்குழந்தையுடன் நடந்தே சென்ற தம்பதிதற்போது கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக வேலை இல்லாமல் இருந்த விசைத்தறி ஊழியர்களுக்கு அட்வான்ஸ் முறையில் விசைத்தறி உரிமையாளர் பணம் கொடுத்துள்ளார். இந்த நிலை சீரானதும் வேலை செய்து அட்வான்ஸ் தொகையை கழித்து விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து இன்று தங்களது சொந்த ஊருக்கு நடந்தே புறப்பட்டனர். இதில் விசைத்தறி தொழிலாளர் தனசேகர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் நடந்து சென்றபோது அவர்களின் செருப்பு அறுந்துவிட்டது. இதனால் மேற்கொண்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அவர்களுக்கு மதிய உணவளித்து, செருப்புகளை வழங்கினர்.
இதுகுறித்து தனசேகர் கூறுகையில், எங்களது சொந்த ஊரான மன்னார்குடியிலிருந்து பிழைப்புக்காக கோவை கருமத்தம்பட்டியில் உள்ள விசைத்தறி கூடத்தில் நான்கு ஆண்டுகளாக வேலை செய்துவந்தோம். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையில்லாமல் வறுமையில் உணவிற்கே வழியில்லாமல் இருக்கின்றோம். எங்களது உரிமையாளரும் அட்வான்ஸ் முறையில் பணத்தை கொடுத்து எங்கள் மீது கடன் சுமையை ஏற்றி வருகிறார்.தனசேகர் பேட்டிஎனவே வேறு வழியில்லாமல் சொந்த ஊருக்கு நடந்து செல்வது என முடிவு செய்து நடந்து வந்தோம். மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் நடந்து செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. எங்களுக்கு அரசு ஏதேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், அவர்களுக்கு பாஸ் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.