திருப்பூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் காலையிலேயே 30 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வீடுகளில் டெலிவரி செய்யப்படுகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள 3 நாட்கள் முழு ஊரடங்கு திருப்பூரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூரில் காலை நேரங்களில் நேற்று வரை செயல்பட்ட காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன், பால் உள்ளிட்ட உணவு பொருட்கள் வீடுகளில் டெலிவரி செய்யப்படுகின்றன. பொதுமக்கள் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு வெளியில் செல்வதை தடுக்கும் வண்ணம் மருந்தகங்கள் மூன்று நாட்களும் முழுமையாக அடைக்கப்படுகின்றன. காரணமின்றி வெளியில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஊரடங்கு மீறியதாக காலையிலேயே மாநகர எல்லைக்குள் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாலைகள் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் பெரும்பாலோனோர் வீடுகளில் முடங்கி இருப்பதால் கடந்த 30 நாள் ஊரடங்கை விட இன்று திருப்பூர் மிகவும் அமைதியான நிலையில் இருக்கிறது.