வேளாண்மையை மாற்றி அமைத்தல், விவசாயிகளின் செழிப்பை பாதுகாத்தல்
-டாக்டர் ரமேஷ் சந்த்
புகழ்பெற்ற விவசாயப் பொருளாதார நிபுணர் மற்றும் கொள்கை நிபுணர், நிதி ஆயோக்கின் உறுப்பினர்
இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை, விவசாயிகள் மீதான அதன் அக்கறை மற்றும் உறுதிப்பாட்டை சார்ந்துள்ளது. அவர்கள் நாட்டு மக்களுக்கு உணவளிப்பதுடன், இந்தியாவின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்தையும் பாதுகாக்கின்றனர். இதை உணர்ந்து, இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தில் விவசாயிகளை மையமாக வைத்துள்ளது. கொள்கைகள், திட்டங்கள் உட்பட விதைகள் முதல் சந்தை வரையிலான ஒட்டுமொத்த சங்கிலியின் வாயிலாக கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு முன் எப்போதும் இல்லாத ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. சீர்திருத்தம் மற்றும் முதலீட்டின் இந்த தசாப்தம், உற்பத்தி மற்றும் சேமிப்பு இரண்டையும் மேம்படுத்தி இந்திய வேளாண் துறையை மாற்றியமைத்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் செலவைவிட குறைந்தபட்சம் 50% லாபத்தை உறுதி செய்யும் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அறிமுகப்படுத்தியது. 2015-16 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவின் வேளாண்மை சராசரி வருடாந்திர வளர்ச்சியாக 4.45% அதிகரித்தது, இது இந்திய வரலாற்றின் எந்த ஒரு 10 ஆண்டு காலத்திலும் பதிவானதை விட மிக அதிகபட்ச வளர்ச்சியாகும். உலக வங்கியின் தரவுகளின்படி இந்தக் காலகட்டத்தில் முக்கிய வேளாண் நாடுகளிடையே அதிகபட்ச வேளாண் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது.
பிரதமரின் விவசாயி கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் சுமார் 3.9 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு விநியோகப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இடர்பாடுகள் பெருவாரியாகக் குறைக்கப்பட்டுள்ளன. 2018-19-ல் 3.4 கோடி விவசாயிகள் என்ற நிலையிலிருந்து 2024-25-ல் 4.1 கோடி பேரை இந்த திட்டம் சென்றடைந்துள்ளது. விவசாயிகள் கடன் அட்டை திட்டத்தின் பாதுகாப்பு 7.75 கோடியாக அதிகரித்துள்ளது. மண்வள அட்டை திட்டம், விவசாயிகளுக்கு மண்ணின் தேவைக்கேற்ப ஊட்டச்சத்து பயன்பாட்டை மாற்றியமைக்க உதவியுள்ளது, இதன் மூலம் செயல்திறன் மற்றும் மகசூலை மேம்படுத்துகிறது.
முன் எப்போதும் இல்லாத வகையில் தொழில்நுட்பமும் விவசாய நிலங்களில் நுழைந்துள்ளது. ட்ரோன்கள், செல்பேசி செயலிகள் மற்றும் நிகழ்கால காலநிலை, சந்தை குறித்த தகவல்களைப் பெறுவதற்கான டிஜிட்டல் தளங்கள் முதலிய வசதிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய விவசாயத்துறையில் ஆண்டுக்கு 5% இலக்காய் நோக்கி பிரதமர் மோடி 75 வயதிலும் நாட்டை வழிநடத்துகிறார். இந்த இலக்கை அடைவது, வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு முக்கியமான முயற்சியைக் குறிக்கிறது. விவசாயிகளை ஆதரிப்பதிலும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இந்தியா அதன் நிகழ்காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல்; வரவிருக்கும் தலைமுறைகளின் நல்வாழ்விலும் முதலீடு செய்கிறது.