சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த மீம்ஸ், காணொலிகள், வர்ணனைகள் பிரபலமாகியது
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாடு மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறித்த செய்திகள் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. வழக்கமான புவிசார் அரசியல் மற்றும் இருதரப்பு நல்லுறவுகள் தொடர்பான பகுப்பாய்வுகளைக் கடந்து அந்நாட்டு சமூக வலைதளப் பயனாளர்களால் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பிரதமர் மோடியின் உடல் மொழி, சைகைகள், மீம்ஸ் போன்றவை விவாதப் பொருளாக உருவாகியுள்ளது. சில வர்ணணைகள் பிரதமரின் பயணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது. ஏராளமான துணுக்குகள், அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சிமாநாடு தூதரக ரீதியிலான செயல்பாடுகளை எடுத்துரைப்பதுடன் உலகின் முன்னணி தலைவராக திரு நரேந்திர மோடியை முன் நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஒவ்வொரு அசைவையும் சீனாவில் உள்ள இணையதள பயனாளர்களால் மிகவும் நெருக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தியான்ஜின் நகரில் ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி கைகுலுக்கிய காட்சிகள் மற்றும் இருநாட்டுத் தலைவர்களும் ஒரே காரில் பயணித்து நடத்திய பேச்சுவார்த்தைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
உச்சிமாநாடு நடைபெறும் இடத்திற்கு இருநாட்டுத் தலைவர்களும் ஒரே நேரத்தில் வருகை தந்தது, உச்சிமாநாடு நடைபெற்ற இடத்தில் இரு தலைவர்களும் பெரும்பாலும் ஒன்றாக இருந்தது ஆகியவை குறித்து இணையதளப் பயனாளி ஒருவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான நெருக்கத்தை கவனித்து வரும் அமெரிக்க அதிபரின் எண்ணங்கள் எவ்வாறு இருக்கும் என்று அந்தப் பயனாளி வினவியுள்ளார்.
குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஹூ ஜிஜின் எழுதியுள்ள கட்டுரையில் பொது நிகழ்வில் இவ்விரு தலைவர்களின் நெருக்கமான ஆலோசனைகள் அமெரிக்க அதிபருக்கு எரிச்சலூட்டும் வகையில் அமைந்திருக்கும் என்றும் மேலும் இது அவருடைய கோபத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ காரில் பயணிப்பதைத் தவித்து ரஷ்ய அதிபர் புதினுடன், ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட காரில் பயணித்தது குறித்தும், பல்வேறு தரப்பினரால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த செயல் பிறநாட்டு தூதரகங்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டதாகவும், இந்தியா – ரஷ்யா இடையேயான நெருங்கிய நட்புறவு குறித்த செய்திகளுக்கு அடிப்படையாகவும் அமைந்துள்ளது என்றும் வெய்போ பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது.
சமூக ஊடகப் பயனாளர்கள் இருநாட்டுத் தலைவர்களின் உடல்மொழி குறித்த துணுக்குகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். ஆன்லைன் விவாதங்களில் இது ஒரு முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. சீனாவில் உள்ள டிக்டாக் செயலியில் பிரதமர் மோடியின் புன்னகை செய்யும் பல்வேறு காட்சிகள் வீடியோ செய்திகளாக வெளியிடப்பட்டு வருகிறது. இரு நாடுகளின் தலைவர்களின் அசைக்க முடியாத பிணைப்புக் குறித்து அமெரிக்க அதிபருக்கு உணர்த்தும் வகையில் ஊடகப் பதிவுகள் அமைந்தள்ளன.
----